Saturday, September 1, 2012

ஏங்க இந்த பாரபட்சம்??



தாய்க்குலத்திற்க்கு ஒரு முக்கிய அறிவிப்பு: இது தாய்க்குலத்திற்கு எதிரான பதிவோ அல்லது ஆண்வர்கத்தின் அடையாளமாகக் காணப்படும் பெண்களைத் தாழ்த்தி எழுதும் பகடிப் பதிவோ அல்ல. இரு பக்கத்தின் சாதக பாதகங்களை சீர்தூக்கிப் பார்க்கும் ஒரு அலசலே ஆகும். நடுவில் வரும் துணுக்குகள் நகைச்சுவைக்கு மட்டுமே..!!

அனைத்து பத்திரிகை மற்றும் சமூக வளைத்தளங்களிலும் பரவலாக காணப்படும் நகைச்சுவை தான் இது. "ஒரு பையன் வண்டில வரப்பொ யார் மேலயாவது மோதிட்டா,அவன் மேல் தப்பே இல்லை என்றாலும் ,"ஏண்டா சாவுகிராக்கி..வூட்டுல சொல்லிட்டு வந்துட்டியா??"ன்னு கேட்கும்..அதே சமூகம் ஒரு பொண்ணுனா அவ மேல தப்பு இருந்தாலும் "ஏம்மா..பாத்து வர மாட்டியான்னு? "குசலம் விசாரிக்கும். இதுலாம் நம்ம பொறப்பு ஸார்-னு ஆதங்கம் பல பசங்க வாய்ல வரும்.




நம்முடைய வரலாற்று காலம் தொடங்கி, இன்று வரை, பெண்கள் மேல் உள்ள இரக்கம், பரிவு போன்றவையே இதற்கு மூலக் காரணம்.பெண் என்றால் பேயும் இரங்கும் என்பது நாடறிந்த பழமொழி.

இதே போல் மற்றொரு கோணமும் உண்டு. ஒரு பெண் 21-வயது ஆகும்போதே, ஒரு குடும்பத்தை நிர்வாகிக்கும் திறனோடும் (ஏதோ இவங்க ஹார்வர்ட் ல எம்.பி.-குடும்ப நிர்வாகம் படிக்க வெச்ச மாதிரி),யாரோ முன்பின் தெரியாத அல்லது தெரிந்தும் பழக்கம் இல்லாத ஒரு குடும்பத்தில், முதல் நாளில் இருந்தே நல்ல பெண் பெயர் வாங்கி ஃப்ரேம் போட்டுதான் மாட்டனும் என்கிற ரேன்ஜுக்கு எதிர்பார்ப்புகள்; அதே ஒரு ஆண்(பையன்) 22-23 வயதில், தானாக முடிவெடுக்க முயலும் போதும், தன் அங்கீகாரத்தை நிலைநிறுத்த எத்தனிக்கும் போதும் "உனக்கு ஒண்ணும் தெரியாது, அதிகப்பிரசங்கி-ன்னு திட்டு தான் வாங்குறான்.

சிந்தித்துப் பார்த்தால், அடிப்படையிலேயே பெண்களும் ஆண்களும், மதிப்பும் அங்கீகாரமும் கிடைக்க எடுக்கும் முயற்சிகளிலும்,அவர்கள் மேல் திணிக்கப்படும் எதிர்பார்ப்புகளிலும் பல வேறுபாடுகள் இருக்கிறது.

இயற்கை அன்னையும் இதில் பாகுபாடு கொண்டவளாகவே நடந்துகொள்கிறாள். நம்ம பயலுகளுக்கு மூளையே லேட்டாதான் வளருதாம். இதை நான் சொல்லவில்லை. ஒரு ஆராய்ச்சி முடிவு இது. அதாவது ஆண்கள்,பெண்களை விட புத்திசாலிகள்...ஆனால் சிறுமிகள், சிறுவர்களை விட புத்திசாலிகள்...(..!!! அதனால தான் நம்ம பயலுக எக்ஸாம்-ல கோட்டை விடறானுங்களா.?? இனிமே பசங்க எக்ஸாம்-ல கம்மியா மார்க் எடுத்தா திட்டாதீங்கப்பா....!!!)

இப்படி வேகமாக வளரும் பெண்களின் மூளை வளர்ச்சி ஒரு கட்டத்தில் குறைகிறது. இந்த வயது, ஆண்களை விட சீக்கிரம். (சீக்கிரம் வளர்ந்தா, சீக்கிரம் தானே நிக்கும்).இந்த மாற்றம் தான் பெண்களுக்கு மெச்சுரிட்டீ வயதை தீர்மானிக்கிறது.இதனால் தான் பெண்ணிற்கு 22 வயதில் குடும்ப பொறுப்பை ஏற்கும் பக்குவம் உள்ளதாக முடிவு செய்யப்பட்டுத் திருமணம் செய்யப்படுகிறது. ஆணுக்கு 25 வயதில் இந்த மெச்சுரிட்டீ அளவு உள்ளதாக காணிக்கப்படுகிறது.

இவ்வாறாக, 21 வயது பெண்ணும், 25 வயது ஆணும் திருமணம் செய்யும் பொழுது, அவர்களின் ஏமோஷனல் லெவெல் சமமாக இருப்பதாக நம்பப்படுகிறது. இதான் நம்ம ஊரு அரேஞ்சுடு மேரேஜ் எனப்படும் பெற்றோர் பார்த்து செய்து வைக்கும் திருமணத்தின் அடிப்படை.இவ்வாறு திருமணம் செய்த பின்னர், பெண்கள் தான் புகுந்த வீட்டையும், கணவனையும் பார்த்துக் கொண்டால் போதும் என்ற எண்ணம் சமூகத்தில் பரவலாக இருந்து வந்தது. இப்போது ஆண் பெண் சமமாக கல்வி, மக்கள் மனத்தில் மாற்றம் என்று பல இருந்தாலும், இந்நிலை இன்னும் முழுமையாக மாறவில்லை என்பதே உண்மை.

பெண்ணிற்கு 15-28 வயது வரையும் ஆணுக்கு 21-35 வயது வரையும், பீக் பெர்பார்மான்ஸ் எனப்படும் உச்ச செயல்திறன் நிலை உள்ளதாக நம்பப்படுகிறது. இது சராசரி தான்.(பலருக்கு இது மாறுபடும்).இன்றும் பொறியியல் மற்றும் பல துறைகளில், பெண்கள் அதிகம் படித்தாலும், வேலைக்குச் சென்றாலும், அவர்கள் தங்கள் முழு திறனை வெளிப்படுத்துகின்றனறா என்பது கேள்விக் குறியே.அப்படி வேலை செய்யும் பெண்களும் பல நேரங்களில் குடும்பமா?? வேலையா?? என்ற கேள்வியில் குடும்பத்தயே தேர்வு செய்கின்றனர்.

ஆண்களின் நிலைமை தலைகீழ். அவர்களுடைய பீக் ஆரம்பம் ஆவதற்குள்ளாகவே அவர்களின் பெரும்பான்மை கல்வித் தகுதிகள் நிர்ணயம் செய்யப்பட்டு விடுகின்றன.அதனால் பல ஆண்கள், தங்கள் கல்வியில், முழு திறமையை வெளிகாட்ட முடியாமல் உள்ளனர்.பீக் செயல் திறனை அடையும் நேரத்தில், இருக்கவே இருக்கு உலகம். "நீ படிச்ச படிப்புக்கும் வாங்கின மார்க்குக்கும் என்ன வேலை கிடைக்கும்.?" என்று உறவுகளின் வசைகள். அப்படியே வேலை கிடைத்தாலும், தனக்கு மேலே உள்ள நரி, கரடி, சிங்கம் போன்ற மிருகங்களை புரிந்து உலக சர்க்கஸ்ஸில் ரிங் மாஸ்டர் ஆவதற்க்குள் அப்பப்பா..!!!

அட அவர்களையும் சமாளித்து, வேலையே கதி என்று இருந்தால், நீ இன்னும் வளரனும் தம்பி என்று அதிகாரிகளும், நீ குடும்பத்துக்கு நேரமே ஒதுக்க மாட்டேங்கற என்று பெற்றோர் அண்ட் குடும்பமும், என்னடா பெரிய வேலை?? ஒரு காது குத்துக்கு கூட வர மாட்டியா?? சம்பாதிக்கற திமிரா? என்று அதே உறவுகளும்(Yes, உனக்குலாம் எப்டி வேலை கிடைக்கும்னு கேட்ட அதே உறவுகள் தான்..!!)

இதெல்லாம் ஈ.எம்(Emotional Maturity) வருவதற்கு முன்பே பெரும்பாலும் முடிந்து விடும்.இதற்குப் பிறகு இவர்களும் நாய், கரடி, பூனை, சிங்கம் என்று மாறி தனக்கு கீழ் வரும் ஈ.எம் அற்ற மக்களை "தான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்..!!" என்ற ரீதியில் படுத்துவார்கள்.

சரி..இப்போ இதுக்கு என்ன பண்ணலாம்னு சொல்ற என்று கேட்டால், என் பதில், பிடிச்சத பிடிச்ச படி செய்ய விடுங்க. பெண்கள் வேலையில் பீக் ஆக திகழும் நேரத்தில் குடும்ப சங்கிலி கொண்டு கட்டாதீர்கள்.அதே போல் ஒவ்வொரு ஆணும் ஈ.எம் அடையும் வரையும், அடைந்த பின் அவன் எடுக்க முயலும் முயற்சிகளையும் புரிந்து கொள்ள முயலவேண்டும். அவ்வாறு எடுக்கும் முயற்சிகள் நன்மை பயப்பின் உதவ வேண்டும். பீக் செயல் திறன் அடையும் நேரத்தில், குடும்பத்திற்காக இதை செய்,என்று வலியுறுத்துவது அவர்களின் திறனை வீண் ஆக்கும் செயல்.

ஆனால் இந்த முறை அனைத்து தரப்பினருக்கும் பொருந்தாது. இந்திய அமைப்பில் குடும்பம் என்ற கட்டுமானம் வலிமையானது.குடும்பத்தைப் பெரிதாக நினைத்து போற்றிப் பாதுகாக்க நினைக்கும் மக்களுக்கு, தற்போது உள்ள முறையே சிறந்தது. சாதிக்கத் துடிக்கும் ஆண்களுக்கும் பெண்களுக்குமே மேலே சொன்ன மாற்றங்கள் அவசியமாகின்றன..!!!

1 comment:

  1. Aanukum Pennukum irukum verubaadai ariyamal unaramal.. rasikamal.. edhirparpugalai valarthu kondulla nam samoogathil parabatcham valaradhan seium.. Varungalathin maatram namidam dhan irukiradhu.. Adharkana thodakamaga indha padhivu amaindhirukiradhu..

    Meena

    ReplyDelete