Saturday, September 1, 2012

நீயெல்லாம் ஏண்டா எழுதற??


பதிவு தொடங்க நினைத்த நொடியில் இருந்து என்னை ஆட்கொண்ட கேள்வி இது. இப்போ வரைக்கும் சத்தியமா பதில் கிடைக்கல பாஸ். இன்றைய சூழலில், எழுத்து என்பது அவ்வளவு சுலபமாக இல்லை. தேர்ந்த எழுத்தாளர்கள் எழுதும் மிகச் சிறந்த எழுத்துக்கள் கூட,வேண்டிய அளவு பாராட்டும் அங்கீகாரமும் பெறுவது இல்லை.

மக்கள் மத்தியில் படிக்கும் பழக்கம் குறைந்து விட்டது, நமக்கு நடுவில், மக்களை ஈர்க்கும் விதமான எழுத்தாளர்கள் குறைந்து விட்டனர் என்றே எண்ணிக் கொண்டு இருந்தேன். பள்ளியில் படிக்கும் போது மதிப்பெண் எடுக்கும் நோக்கில் கட்டுரைகள் எழுதியதோடு எழுத்துப் பயிற்சியையும், சிந்தித்து எழுதும் பழக்கத்தையும் மூட்டை கட்டியாகி விட்டது.

அதன் பிறகு பொறியியல்,வேலை என்று சில பல ஆண்டுகள் ஓடிவிட்டன. தமிழ் வாசிப்புகள் மறக்காமலிருக்க பத்திரிக்கைகளும், புத்தகங்களும் உதவின. ஆனால் பெரும்பாலான வார,மாதப் பத்திரிக்கைகள் சினிமா செய்திகளை மட்டுமே நம்பி வலம் வந்தன. ஆங்கிலத்தில் உள்ளது போன்ற வலைத்தளங்களும் அறிவைத் தூண்டும் கட்டுரைகளும் ஏன் தமிழில் இல்லை என்ற எண்ணம் என்னை பதிவர்களின் உலகத்தின் பக்கம் திருப்பியது.

பள்ளியில் நான் எழுதிய கட்டுரைகளுக்குக் கிடைத்த பாராட்டு, கண்ணை மூடிக்கொண்டு உலகத்தை இருட்டாகக் கண்ட பூனை போல,என் மூளையைச் சுயமாக எழுத்தாளன் முத்திரை குத்திக்கொள்ளச் செய்தது.

அங்கு வந்து கண்ட பிறகு தான் நான் எத்தனை அறிவிலியாக இருந்திருக்கிறேன் என்பது புரிந்தது. எத்தனை அருமையான எண்ணங்கள், வசீககரிக்கும் நடை, தெளிவான பார்வை என்று பலரும் பின்னி பெடல் எடுத்துக் கொண்டு இருக்கின்றனர். இவர்களைப் பார்த்த உடன், நானும் எழுத்தாளன் என்று இருந்த எண்ணம் தகர்ந்தது.

ஆனால் கூடவே பதிவு எழுதும் ஆசையும் பிறந்தது. அதற்கான தகுதி உள்ளதா என்பதை எல்லாம் நான் எண்ணவில்லை.பொதுவாக எழுத்துக்கும் பேச்சுக்கும் ஏழாம் பொருத்தம் உண்டு. சக்களத்தி மாதிரி, ஒன்று இருந்தால் மற்றது சரியாக இருக்காது. என் நிலைமையும் அதான்.ஓரளவு எழுத்துப்பிழையைத் தவிர்த்து எழுதக் கூடிய பாக்கியம் பெற்ற நான் பேசுவதில் மாபெரும் கஞ்சன். வார்த்தைகள் "வெறும் 500 ரூபாய் நோட்டுகள் மட்டும் தான் வரும்..!!!" என்று சொல்லும் ஸ்டேட் பாங்க் ஏடிஎம்கள் மாதிரி,பல நிபந்தனைகளுக்கு உட்பட்டுத் தான் வெளியே வரும்.

இந்நிலையில் நாம நினைக்கறத நாலு பேருக்கு சொல்ல எழுதி தான் ஆகணும்னு ஒரு விபரீத முடிவு எடுத்துத்டேன். பதிவுலகமும் எனக்கு உதவி பண்ணி உங்களுக்கு எதிரா சதி பன்னிருச்சு. எனக்குத் தெரிந்தவற்றை தெரிந்த முறையில் எழுத முயற்சி செய்கிறேன். இங்கு ஒரு சராசரி மனிதனின் எண்ணங்களும்,கருத்துகளும்,பார்வைகளும் பதிவு செய்யப்படும். உங்கள் ஆதரவும் கருத்துகளும் தேவை..!!!

2 comments:

  1. Valaipoovin vaasagi aaga unai padhivu ulagirku varaverkiren.. !!!!!!! vaarthaigal vilai madhipatravai.. adhil kanjanai irupavan nichayamaga arivili aaga iruka mudiyadhu.. un muyarchiku valthukal..!!!!!!!!

    Meena

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் பதிவிற்கும் நன்றி..!!

      Delete