Monday, September 3, 2012

ஹிட்லரின் உண்மையான தவறுகள்-2..!!!


சென்ற பதிவில் ஹிட்லரின் பிறப்பையும், அவருக்கு யூதர்களின் மேல் வெறுப்பை ஏற்படுத்திய நிகழ்வுகளையும் பார்த்தோம். பகுதி 1-இ படிக்க இங்கே சொடுக்கவும்..

அந்தோன் டிரெக்சிலேர் (Anton Drexler). என்பவரின் சேர்க்கை பற்றிய குறிப்போடு சென்றய பதிவு முடிந்தது. அவர் யார், ஹிட்லருக்கு எவ்வாறு அவருடன் பழக்கம் ஏற்பட்டது என்பதைக் காணும் முன்னர்,அந்த சேர்க்கைக்குக் காரணத்தைக் காண்போம்.

தினசரி உணவிற்க்கே வழி இல்லாமல் வியென்னா  நகர தெருக்களில் சுற்றிய ஹிட்லருக்கு புத்தகங்கள் மட்டுமே ஆறுதலாக இருந்தன. எந்த அளவுக்கு ஆறுதல் என்றால், பல நாட்கள், புத்தகங்கள் வாங்குவதற்காகத், தன் உணவை விட்டுக் கொடுத்துள்ளார். இதை தனது சுய சரிதைப் புத்தகத்தில் கூறும்போது "நான் வாங்கிய ஒவ்வொரு புத்தகமும், என் நாளில் பசியை அதிகரிக்க செய்தேன் என்று பொருள்.நான் எந்த செயலைச் செய்யும் போதும் தனியாக இருந்தது இல்லை. பசி எப்போதும் என்னுடனே இருந்தது.புத்தகங்களைத் தவிர எனக்கு வேறு இன்பம் இருந்தது இல்லை."என்று குறிப்பிடுகிறார்.

சரிப்பா..இவ்ளோ கஷ்டப்பட்டு வந்த பையன், என் இவ்ளோ கொடூரமா மாறினான்?? அப்டீன்னு கேள்வி வரணும்...அங்க தான் ட்விஸ்ட். ஹிட்லர் படித்த அத்தனையுமே நாட்டுப்பற்றை ஊட்டும் புத்தகங்கள்..ஜெர்மானிய மக்களின் வீரமும், பெருமையும் ஹிட்லர் மனத்தில் ஆழமாக ஊறின. அவரின் தந்தைநாட்டுப் பற்று அதிகம் ஆயிற்று(!!! ஜெர்மானியர்கள் அப்டிதான்பா சொல்லிக்கறாங்க. தந்தைக்கு முக்கியத்துவம் அதிகம் போல. அப்படியாவது ஆம்பளைங்கள மதிக்கறாங்களே..!!!)

தனக்கு விருப்பமான ஓவியக் கல்லூரியில் இடம் கிடைக்காமல் போகவே, தனது எதிர் காலத்தைப் பற்றி முடிவு எடுக்க வேண்டிய கட்டாயம் ஹிட்லர்க்கு ஏற்பட்டது. அந்த நேரத்தில் தான், முதலாம் உலகப் போர் ஆரம்பம் ஆனது.தனது தந்தை நாட்டிற்க்குச் சேவை செய்யும் நேரம் வந்து விட்டதாக ஹிட்லருக்குத் தோன்றியது. ராணுவத்தில் சேர்ந்து ஜெர்மனிக்காகப் போராட முடிவு செய்தார்.

தனது 25 வது வயதில் சிப்பாயாகச் சேர்ந்தார். பட்டாளத்துல அவருக்கு குரு உச்சத்துல இருந்திருக்கணும்னு ஜோசியக்காரங்க சொல்றாங்க. அவரோட அதிர்ஷ்டமோ,இல்ல உலகத்தோட துரதிஷ்டமோ தெரியல...போர்ல எங்கலாம் குண்டு வெடிக்குதோ அங்கலாம் நம்மாளு மிஸ்ஸிங். ஒருமுறை, அவரோட இருந்த 3500 பேர் ஒரு குண்டு வெடிப்பில் காலி. ஹிட்லருக்கு ஒரு சிறு கீறல் கூட இல்லையாம்.
முதலாம் உலகப் போரில் ஹிட்லர்(இடது பக்கம் உள்ளவர்)
ஹிட்லரின் தோற்றம், ராணுவத்திற்கு அவ்வளவு ஏற்புடையதாக இருக்காது. சொல்லப் போனால், போர் ஏற்படும் முன் ராணுவம் நடத்திய தகுதிச் சேர்க்கைத் தேர்வில் ஹிட்லர் தோற்றத்தின் காரணமாக நிராகரிக்கப்பட்டார். எனவே தேவைக்காக ராணுவத்தில் சேர்க்கப் பட்டாலும், ஹிட்லருக்குப் பெரும்பாலும் ராணுவச் செய்திகளைக் கொண்டு சேர்க்கும் வேலையே தரப்பட்டது. பல போர்களில் உயிர் தப்பித் தாக்குப் பிடித்ததாலும், சில போர்களில் வீரமாக செயல்பட்டதாலும் ஹிட்லருக்கு உயரிய விருதான எஃகு சிலுவை(Iron Cross) தரப்பட்டது.

இந்தப் பதிவில் டிரெக்சிலேர் பத்தி சொல்லலாம்னு பார்த்தா அதுக்கு நடுல நெறைய விஷயம் நடந்திருக்கு. எல்லாருக்கும் தெரிஞ்சதா சொல்றத விட நெறைய தெரியாததா சொல்றது தானே நல்லது. அதனால இன்னொரு சுவாரசியமான தகவல் பார்த்துட்டு டிரெக்சிலேர் பத்தி பாப்போம்.

ஹிட்லர் ராணுவத்தில் இருக்கும் போது அங்கே ஒரு நாயைக் கண்டெடுத்தார். அதை புக்சில்(Fuchsl) என்று பெயரிட்டு தனது செல்லப் பிராணியாக வளர்த்து வந்தார். ஆனால் போரின் நடுவே அது எங்கோ தொலைந்து போனது. இது ஹிட்லரை மிகவும் பாதித்ததாக உடனிருந்தவர்கள் தெரிவித்தனர். ஹிட்லருக்கு நாய்களின் மேல் இருந்த இந்த அன்புதான் பின்னாளில் அவரை பல நாய்களை வளர்க்கச் செய்தது.


சரி..இப்போ மீண்டும் கதைக்கு வருவோம்.15 அக்டோபர் 1918 ஹிட்லர் நச்சுக்காற்றுக் குண்டு தாக்கியதில் தற்காலிகமாக பார்வையிழந்த நிலையில் படுகாயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நேரத்தில் போர் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது. போருக்கான முழு பொறுப்பையும் ஜெர்மனி ஏற்க வேண்டும் என்றும், அதற்கான நஷ்ட ஈடையும் ஜெர்மனிதான் ஏற்க வேண்டும் என்றும் உடன்படிக்கை ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் ஜெர்மனி கையெழுத்திட வற்புறுத்தப்பட்டது. ஜெர்மனியின் ராணுவம் வெறும் ஒரு லட்சமாக குறைக்கப்பட்டது.

உண்மையான தந்தைநாட்டுப் பற்று மிக்க ஹிட்லர் தாங்குவாரா?? மனமுடைந்து போனார். தனது நாடு சரண் அடைந்ததை அவரால் ஏற்க முடியவில்லை. உயர் பதவியில் இருந்த யூதர்கள் தான் இதற்கும் காரணம் என்று ஹிட்லர் எண்ணினார். அவர்கள் தான் நாட்டை விலை பேசி விற்று விட்டதாகவும், அவர்களை ஒழித்தாலன்றி தனது நாடு முன்னேறாது என்றும் நம்பினார்.

மருத்துவமனையில் இருந்து வெளி வந்த அவர் மீண்டும் ராணுவப் பணியில் அமர்த்தப்பட்டார். இம்முறை சிப்பாயாக அல்ல. உளவாளியாக. ஆம்...!! கார்ல் மாயிர்(Karl Mayr) என்பவர் ஹிட்லரை ரகசிய உளவுப் பணியில் ஈடுபடுத்தினார். அப்போது தான் அவருக்கு அந்தோன் டிரெக்சிலேறின் அறிமுகம் கிடைத்தது.
அந்தோன் டிரெக்சிலேர்-ஹிட்லரின் குரு

டிரெக்சிலேர் ஜெர்மன் தொழிலாளர் கட்சி-ஐ உருவாக்கியவர். அடிப்படையில் ஒரு கவிஞர். முதலாம் உலகப் போரின் போது தந்தைநாட்டுக் கட்சியில் இருந்தார். பின்னர் ஜெர்மன் தொழிலாளர் கட்சியை உருவாக்கினார். இவரின் ஒரு கூட்டத்திற்கு வருகை தந்த ஹிட்லர், ஒரு கட்டத்தில், கூட்டத்தில் பேசிய ஒரு கருத்துக்கு மாற்றுக் கருத்து தெரிவித்தார். இவரது பேச்சால் கவரப்பட்ட டிரெக்சிலேர், இவருக்குத் தனது கட்சியில் சேர அழைப்பு விடுத்தார். டிரெக்சிலேறின் கொள்கைகள் தனது எண்ணங்களை ஒத்து இருப்பதை ஹிட்லர் உணர்ந்தார். தனது பேச்சாற்றலை வெளிப்படுத்த இதுவே சரியான சந்தர்ப்பம் என்று எண்ணினார். ஜெர்மனி அழிவின் முதல் பக்கத்தில் பிள்ளையார் சுழி போடப்பட்டது இந்தக் கூட்டணியின் மூலம்தான்.

கட்சியின் 56 வது நபராகச் சேர்ந்த ஹிட்லர், வெகு சீக்கிரமே தலைமைப் பேச்சாளர் ஆனார். அவரது பேச்சுக்கு, நாளுக்கு நாள் கூட்டம் சேர்ந்தது. 10, 100, 1000 என்று மக்கள் வெள்ளம்ஹிட்லரின் எழுச்சி மிகுந்த பேச்சைக் கேட்க கூடியது. எச்சில் தெறிக்கும் ஆவேசத்துடன், கையை உயர்த்தி ஹிட்லர் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் அவருக்கு கை தட்டல் வாங்கித் தந்தது.

இப்படிப் பேச்சின் மூலம் பல மக்களை ஈர்த்த ஹிட்லர் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்க்கும் தருணமும் வந்தது. அதற்க்கு முன்னால் ஹிட்லரின் ட்ரேட் மார்க் மீசை வந்த வரலாறு தெரிய வேண்டாமோ..!!!!! தொடருவோம்....:-)


ஹிட்லரின் உண்மையான தவறுகள்-1..!!!


சர்வாதிகாரம்-இந்த வார்த்தையைக் கூறும் போதே, இதற்குப் பொருளாக அகராதியில் அர்த்தமாகக் கூட ஆகிவிடும் அளவுக்கு நினைவிற்கு வரும் ஒரு பெயர் ஹிட்லர்.

எந்த கொடுமையான செயலைச் செய்தவனை குறிப்பிடும் போதும் ஹிட்லர் மாதிரி என்று பரவலாகக் கூறப்படுவதைக் கேட்டிருக்கலாம். எல்லோருக்குமே ஹிட்லர் ஏறத்தாழ ஒரு கோடி யூதர்களைக் கொன்றது தெரிந்திருக்கும். சரித்திரத்தின் பக்கங்களில் சிகப்புப் பக்கங்களாய் என்றும் பயமுறுத்தும் செயல்.இதற்கு ஹிட்லர் காரணம் என்பது உண்மை தான். ஆனால் ஹிட்லர் மட்டும் தான் காரணமா?

இதற்கு சரித்திரத்தில் பதில் தேடினால் ஆம் என்று வரும். ஏனெனில் சரித்திரம் என்பது வெற்றி பெற்றவர்களால் எழுதப்பட்டது. பல நேரங்களில் பாரபட்சமானது.சரித்திரத்தில் பதில் தேடும் போது மறைக்கப்பட்ட பக்கங்களே பல நேரங்களில் உண்மையைச் சொல்லும்.

அப்படிப்பட்ட பக்கங்கள் நம்ம ஹிட்லர் கதையிலயும் இருக்கு. அதை பார்ப்போம்.

ஹிட்லரின் அப்பா ஆலாய்ஸ் ஹிட்லர். இவர் தகாத உறவில் பிறந்ததால் தன்னுடைய தாய் பெயரை பெயருக்குப் பின்னால் சேர்த்துக் கொண்டார். இவருக்கும் க்ளாரா என்ற பெண்மணிக்கும் பிறந்தவர் தான் அடால்ப் ஹிட்லர். ஹிட்லரின் நைனாவுக்கு அடக்குமுறை குணம் கொஞ்சம் ஓவர். அதுவே சிறுவன் ஹிட்லர் மனத்தில் ஆழமாகப் பதிந்தது.

சிறு வயதிலேயே அடால்ப் ஹிட்லரின் தந்தை,வீட்டில் உள்ள அனைவரையும் அடக்கி ஆளும் தன்மை உடையவராக இருந்தார்.வீட்டில் பல கடுமையான விதிமுறைகள், தன் பிள்ளைகள் இதைதான் செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் என்று அடால்ப்பின் வீடே ஒரு குட்டி ராணுவம் போல இருந்தது.முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பது போல்,அடால்ப்பின் வாழ்விலும், அவரது தந்தையின் அடக்குமுறை பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது.இந்த அடக்குமுறையின் வெளிப்பாடே பிற்காலத்தில் ஹிட்லரை சர்வாதிகாரியாக மாற்றியது.

அடுத்ததாக ஹிட்லர் தனது இளமைகாலத்தைக் கழித்த வியென்னா நகரம் யூதர்களுக்கு எதிரான சிந்தனையைத் தூண்ட வழி வகுத்தது.அனைவரும் கூறும் குற்றச்சாட்டு ஹிட்லர் யூதர்களுக்கு எதிரானவர் என்பதே. ஆனால் இது பல காலமாக ஜெர்மானிய கலாசாரத்தில் மட்டுமல்லாது, உலக சரித்திரத்திலேயே ஊறிய ஒரு விஷயம் என்பது நம்மில் எத்தனை பேர் அறிவோம்??

ஆண்டி சிமெண்டிஸ்ம்(Anti-Sementism) எனப்படும் யூதர்களுக்கு எதிரான கொள்கைகள் 1860-இலேயே உருவானது.இதற்கு யூதர்களுக்கு எதிரான பார்வை என்பது பொருள். யூதர்களை வெறுப்புடன் பார்க்க பல காரணங்கள் முன் வைக்கப்பட்டன. இவற்றில் பெரும்பாலானவை ஆதாரம் அற்றவை எனினும் மக்கள் மனத்தில் ஊறிய ஒன்று மாறுமா என்ன?? அக்காரணங்களில் சில...

1) யூதர்கள் சுயநலவாதிகள்.
2) யூதர்கள் பேராசையும் கஞ்சத்தனமும் கொண்டவர்கள்.
3) யூதர்கள், யூதர் அல்லாதவரை ஏமாற்றத் தயங்கமாட்டார்கள்.
4) யூதர்கள், தாம் செல்லும் நாட்டிற்க்கு அழிவை தேடித் தருவார்கள்.
5) பரவலான கருத்தாக, யூதர்கள், தாங்கள் குடியேறும் நாட்டில்,தவறான வழிகள் மூலம் நாட்டின் செல்வத்தையும் உயர் பதவிகளையும் அடைந்து விடுவார்கள்.

கடைசியாக சொல்லப்பட்ட காரணம் கார்ல் லூகர்(Karl Luger) என்பவருக்கு வயிற்றில் புளியைக் கரைத்திருக்க வேண்டும். இவர் 1900-களில் வியென்னா நகர மேயராக இருந்தவர். குடியேறிய மக்கள் பூர்வீகக் குடியினரை ஆளுவதா?? என்று கொதித்தவர். இவரது யூதர்களுக்கு எதிரான அரசியல் கொள்கை மிகப் பிரபலம். அவை, அப்போது இளைஞனாக இருந்த ஹிட்லர் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

அப்போது தான் மிகவும் விரும்பி சேரத் துடித்த கலைக் கல்லூரியில் இரு முறை இடம் மறுக்கப்பட்டது,தாயின் மரணம், பொருளாதார சீர்குலைவு போன்றவை ஹிட்லரை வெறுப்பின் விளிம்பிற்க்குத் தள்ளியது. இந்த இன்னல்களுக்குக் காரணம் தேடி அலைந்த ஹிட்லரை, அன்றைய வியென்னா யூதர்கள் பக்கம் திருப்பியது. தன் பூர்வீகக் குடிகள் மட்டுமே அனுபவிக்க உரிமையுள்ள நிலத்தைக், குடியேறிய மக்கள் பறிப்பதா என்று கேள்வி எழுந்தது. ஒரு காலேஜ் ஸீட் கெடச்சிருந்தா ஹிட்லரை பிகாசோ மாதிரி ஒரு ஓவியராகத் தான் உலகம் அறிந்து இருக்கும்.

வாழ்வில் எவ்ளோ சின்ன விஷயம் னு நாம நினைக்கறது எவ்ளோ தாக்கத்தை ஏற்படுத்துது பாருங்க...சரி, நாட்டில எவ்வளவோ பேருக்கு ஸீட் கிடைககறது இல்ல..அத்தன பேருமா உலகத்தை அழிக்க கெளம்பிடறாங்க அப்டீன்னு நீங்க கேட்கலாம்.
நம்ம ஊரில சேர்க்கை அப்படின்னு ஒரு வார்த்தை உண்டு. அந்த சேர்க்கை தான், சாதாரண மனமுடைந்த இளைஞனான ஹிட்லரை மாபெரும் சர்வாதிகாரியாக மாற்றியது.

அந்த சேர்க்கையின் பெயர்....அந்தோன் டிரெக்சிலேர் (Anton Drexler).

Saturday, September 1, 2012

நீயெல்லாம் ஏண்டா எழுதற??


பதிவு தொடங்க நினைத்த நொடியில் இருந்து என்னை ஆட்கொண்ட கேள்வி இது. இப்போ வரைக்கும் சத்தியமா பதில் கிடைக்கல பாஸ். இன்றைய சூழலில், எழுத்து என்பது அவ்வளவு சுலபமாக இல்லை. தேர்ந்த எழுத்தாளர்கள் எழுதும் மிகச் சிறந்த எழுத்துக்கள் கூட,வேண்டிய அளவு பாராட்டும் அங்கீகாரமும் பெறுவது இல்லை.

மக்கள் மத்தியில் படிக்கும் பழக்கம் குறைந்து விட்டது, நமக்கு நடுவில், மக்களை ஈர்க்கும் விதமான எழுத்தாளர்கள் குறைந்து விட்டனர் என்றே எண்ணிக் கொண்டு இருந்தேன். பள்ளியில் படிக்கும் போது மதிப்பெண் எடுக்கும் நோக்கில் கட்டுரைகள் எழுதியதோடு எழுத்துப் பயிற்சியையும், சிந்தித்து எழுதும் பழக்கத்தையும் மூட்டை கட்டியாகி விட்டது.

அதன் பிறகு பொறியியல்,வேலை என்று சில பல ஆண்டுகள் ஓடிவிட்டன. தமிழ் வாசிப்புகள் மறக்காமலிருக்க பத்திரிக்கைகளும், புத்தகங்களும் உதவின. ஆனால் பெரும்பாலான வார,மாதப் பத்திரிக்கைகள் சினிமா செய்திகளை மட்டுமே நம்பி வலம் வந்தன. ஆங்கிலத்தில் உள்ளது போன்ற வலைத்தளங்களும் அறிவைத் தூண்டும் கட்டுரைகளும் ஏன் தமிழில் இல்லை என்ற எண்ணம் என்னை பதிவர்களின் உலகத்தின் பக்கம் திருப்பியது.

பள்ளியில் நான் எழுதிய கட்டுரைகளுக்குக் கிடைத்த பாராட்டு, கண்ணை மூடிக்கொண்டு உலகத்தை இருட்டாகக் கண்ட பூனை போல,என் மூளையைச் சுயமாக எழுத்தாளன் முத்திரை குத்திக்கொள்ளச் செய்தது.

அங்கு வந்து கண்ட பிறகு தான் நான் எத்தனை அறிவிலியாக இருந்திருக்கிறேன் என்பது புரிந்தது. எத்தனை அருமையான எண்ணங்கள், வசீககரிக்கும் நடை, தெளிவான பார்வை என்று பலரும் பின்னி பெடல் எடுத்துக் கொண்டு இருக்கின்றனர். இவர்களைப் பார்த்த உடன், நானும் எழுத்தாளன் என்று இருந்த எண்ணம் தகர்ந்தது.

ஆனால் கூடவே பதிவு எழுதும் ஆசையும் பிறந்தது. அதற்கான தகுதி உள்ளதா என்பதை எல்லாம் நான் எண்ணவில்லை.பொதுவாக எழுத்துக்கும் பேச்சுக்கும் ஏழாம் பொருத்தம் உண்டு. சக்களத்தி மாதிரி, ஒன்று இருந்தால் மற்றது சரியாக இருக்காது. என் நிலைமையும் அதான்.ஓரளவு எழுத்துப்பிழையைத் தவிர்த்து எழுதக் கூடிய பாக்கியம் பெற்ற நான் பேசுவதில் மாபெரும் கஞ்சன். வார்த்தைகள் "வெறும் 500 ரூபாய் நோட்டுகள் மட்டும் தான் வரும்..!!!" என்று சொல்லும் ஸ்டேட் பாங்க் ஏடிஎம்கள் மாதிரி,பல நிபந்தனைகளுக்கு உட்பட்டுத் தான் வெளியே வரும்.

இந்நிலையில் நாம நினைக்கறத நாலு பேருக்கு சொல்ல எழுதி தான் ஆகணும்னு ஒரு விபரீத முடிவு எடுத்துத்டேன். பதிவுலகமும் எனக்கு உதவி பண்ணி உங்களுக்கு எதிரா சதி பன்னிருச்சு. எனக்குத் தெரிந்தவற்றை தெரிந்த முறையில் எழுத முயற்சி செய்கிறேன். இங்கு ஒரு சராசரி மனிதனின் எண்ணங்களும்,கருத்துகளும்,பார்வைகளும் பதிவு செய்யப்படும். உங்கள் ஆதரவும் கருத்துகளும் தேவை..!!!

ஏங்க இந்த பாரபட்சம்??



தாய்க்குலத்திற்க்கு ஒரு முக்கிய அறிவிப்பு: இது தாய்க்குலத்திற்கு எதிரான பதிவோ அல்லது ஆண்வர்கத்தின் அடையாளமாகக் காணப்படும் பெண்களைத் தாழ்த்தி எழுதும் பகடிப் பதிவோ அல்ல. இரு பக்கத்தின் சாதக பாதகங்களை சீர்தூக்கிப் பார்க்கும் ஒரு அலசலே ஆகும். நடுவில் வரும் துணுக்குகள் நகைச்சுவைக்கு மட்டுமே..!!

அனைத்து பத்திரிகை மற்றும் சமூக வளைத்தளங்களிலும் பரவலாக காணப்படும் நகைச்சுவை தான் இது. "ஒரு பையன் வண்டில வரப்பொ யார் மேலயாவது மோதிட்டா,அவன் மேல் தப்பே இல்லை என்றாலும் ,"ஏண்டா சாவுகிராக்கி..வூட்டுல சொல்லிட்டு வந்துட்டியா??"ன்னு கேட்கும்..அதே சமூகம் ஒரு பொண்ணுனா அவ மேல தப்பு இருந்தாலும் "ஏம்மா..பாத்து வர மாட்டியான்னு? "குசலம் விசாரிக்கும். இதுலாம் நம்ம பொறப்பு ஸார்-னு ஆதங்கம் பல பசங்க வாய்ல வரும்.




நம்முடைய வரலாற்று காலம் தொடங்கி, இன்று வரை, பெண்கள் மேல் உள்ள இரக்கம், பரிவு போன்றவையே இதற்கு மூலக் காரணம்.பெண் என்றால் பேயும் இரங்கும் என்பது நாடறிந்த பழமொழி.

இதே போல் மற்றொரு கோணமும் உண்டு. ஒரு பெண் 21-வயது ஆகும்போதே, ஒரு குடும்பத்தை நிர்வாகிக்கும் திறனோடும் (ஏதோ இவங்க ஹார்வர்ட் ல எம்.பி.-குடும்ப நிர்வாகம் படிக்க வெச்ச மாதிரி),யாரோ முன்பின் தெரியாத அல்லது தெரிந்தும் பழக்கம் இல்லாத ஒரு குடும்பத்தில், முதல் நாளில் இருந்தே நல்ல பெண் பெயர் வாங்கி ஃப்ரேம் போட்டுதான் மாட்டனும் என்கிற ரேன்ஜுக்கு எதிர்பார்ப்புகள்; அதே ஒரு ஆண்(பையன்) 22-23 வயதில், தானாக முடிவெடுக்க முயலும் போதும், தன் அங்கீகாரத்தை நிலைநிறுத்த எத்தனிக்கும் போதும் "உனக்கு ஒண்ணும் தெரியாது, அதிகப்பிரசங்கி-ன்னு திட்டு தான் வாங்குறான்.

சிந்தித்துப் பார்த்தால், அடிப்படையிலேயே பெண்களும் ஆண்களும், மதிப்பும் அங்கீகாரமும் கிடைக்க எடுக்கும் முயற்சிகளிலும்,அவர்கள் மேல் திணிக்கப்படும் எதிர்பார்ப்புகளிலும் பல வேறுபாடுகள் இருக்கிறது.

இயற்கை அன்னையும் இதில் பாகுபாடு கொண்டவளாகவே நடந்துகொள்கிறாள். நம்ம பயலுகளுக்கு மூளையே லேட்டாதான் வளருதாம். இதை நான் சொல்லவில்லை. ஒரு ஆராய்ச்சி முடிவு இது. அதாவது ஆண்கள்,பெண்களை விட புத்திசாலிகள்...ஆனால் சிறுமிகள், சிறுவர்களை விட புத்திசாலிகள்...(..!!! அதனால தான் நம்ம பயலுக எக்ஸாம்-ல கோட்டை விடறானுங்களா.?? இனிமே பசங்க எக்ஸாம்-ல கம்மியா மார்க் எடுத்தா திட்டாதீங்கப்பா....!!!)

இப்படி வேகமாக வளரும் பெண்களின் மூளை வளர்ச்சி ஒரு கட்டத்தில் குறைகிறது. இந்த வயது, ஆண்களை விட சீக்கிரம். (சீக்கிரம் வளர்ந்தா, சீக்கிரம் தானே நிக்கும்).இந்த மாற்றம் தான் பெண்களுக்கு மெச்சுரிட்டீ வயதை தீர்மானிக்கிறது.இதனால் தான் பெண்ணிற்கு 22 வயதில் குடும்ப பொறுப்பை ஏற்கும் பக்குவம் உள்ளதாக முடிவு செய்யப்பட்டுத் திருமணம் செய்யப்படுகிறது. ஆணுக்கு 25 வயதில் இந்த மெச்சுரிட்டீ அளவு உள்ளதாக காணிக்கப்படுகிறது.

இவ்வாறாக, 21 வயது பெண்ணும், 25 வயது ஆணும் திருமணம் செய்யும் பொழுது, அவர்களின் ஏமோஷனல் லெவெல் சமமாக இருப்பதாக நம்பப்படுகிறது. இதான் நம்ம ஊரு அரேஞ்சுடு மேரேஜ் எனப்படும் பெற்றோர் பார்த்து செய்து வைக்கும் திருமணத்தின் அடிப்படை.இவ்வாறு திருமணம் செய்த பின்னர், பெண்கள் தான் புகுந்த வீட்டையும், கணவனையும் பார்த்துக் கொண்டால் போதும் என்ற எண்ணம் சமூகத்தில் பரவலாக இருந்து வந்தது. இப்போது ஆண் பெண் சமமாக கல்வி, மக்கள் மனத்தில் மாற்றம் என்று பல இருந்தாலும், இந்நிலை இன்னும் முழுமையாக மாறவில்லை என்பதே உண்மை.

பெண்ணிற்கு 15-28 வயது வரையும் ஆணுக்கு 21-35 வயது வரையும், பீக் பெர்பார்மான்ஸ் எனப்படும் உச்ச செயல்திறன் நிலை உள்ளதாக நம்பப்படுகிறது. இது சராசரி தான்.(பலருக்கு இது மாறுபடும்).இன்றும் பொறியியல் மற்றும் பல துறைகளில், பெண்கள் அதிகம் படித்தாலும், வேலைக்குச் சென்றாலும், அவர்கள் தங்கள் முழு திறனை வெளிப்படுத்துகின்றனறா என்பது கேள்விக் குறியே.அப்படி வேலை செய்யும் பெண்களும் பல நேரங்களில் குடும்பமா?? வேலையா?? என்ற கேள்வியில் குடும்பத்தயே தேர்வு செய்கின்றனர்.

ஆண்களின் நிலைமை தலைகீழ். அவர்களுடைய பீக் ஆரம்பம் ஆவதற்குள்ளாகவே அவர்களின் பெரும்பான்மை கல்வித் தகுதிகள் நிர்ணயம் செய்யப்பட்டு விடுகின்றன.அதனால் பல ஆண்கள், தங்கள் கல்வியில், முழு திறமையை வெளிகாட்ட முடியாமல் உள்ளனர்.பீக் செயல் திறனை அடையும் நேரத்தில், இருக்கவே இருக்கு உலகம். "நீ படிச்ச படிப்புக்கும் வாங்கின மார்க்குக்கும் என்ன வேலை கிடைக்கும்.?" என்று உறவுகளின் வசைகள். அப்படியே வேலை கிடைத்தாலும், தனக்கு மேலே உள்ள நரி, கரடி, சிங்கம் போன்ற மிருகங்களை புரிந்து உலக சர்க்கஸ்ஸில் ரிங் மாஸ்டர் ஆவதற்க்குள் அப்பப்பா..!!!

அட அவர்களையும் சமாளித்து, வேலையே கதி என்று இருந்தால், நீ இன்னும் வளரனும் தம்பி என்று அதிகாரிகளும், நீ குடும்பத்துக்கு நேரமே ஒதுக்க மாட்டேங்கற என்று பெற்றோர் அண்ட் குடும்பமும், என்னடா பெரிய வேலை?? ஒரு காது குத்துக்கு கூட வர மாட்டியா?? சம்பாதிக்கற திமிரா? என்று அதே உறவுகளும்(Yes, உனக்குலாம் எப்டி வேலை கிடைக்கும்னு கேட்ட அதே உறவுகள் தான்..!!)

இதெல்லாம் ஈ.எம்(Emotional Maturity) வருவதற்கு முன்பே பெரும்பாலும் முடிந்து விடும்.இதற்குப் பிறகு இவர்களும் நாய், கரடி, பூனை, சிங்கம் என்று மாறி தனக்கு கீழ் வரும் ஈ.எம் அற்ற மக்களை "தான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்..!!" என்ற ரீதியில் படுத்துவார்கள்.

சரி..இப்போ இதுக்கு என்ன பண்ணலாம்னு சொல்ற என்று கேட்டால், என் பதில், பிடிச்சத பிடிச்ச படி செய்ய விடுங்க. பெண்கள் வேலையில் பீக் ஆக திகழும் நேரத்தில் குடும்ப சங்கிலி கொண்டு கட்டாதீர்கள்.அதே போல் ஒவ்வொரு ஆணும் ஈ.எம் அடையும் வரையும், அடைந்த பின் அவன் எடுக்க முயலும் முயற்சிகளையும் புரிந்து கொள்ள முயலவேண்டும். அவ்வாறு எடுக்கும் முயற்சிகள் நன்மை பயப்பின் உதவ வேண்டும். பீக் செயல் திறன் அடையும் நேரத்தில், குடும்பத்திற்காக இதை செய்,என்று வலியுறுத்துவது அவர்களின் திறனை வீண் ஆக்கும் செயல்.

ஆனால் இந்த முறை அனைத்து தரப்பினருக்கும் பொருந்தாது. இந்திய அமைப்பில் குடும்பம் என்ற கட்டுமானம் வலிமையானது.குடும்பத்தைப் பெரிதாக நினைத்து போற்றிப் பாதுகாக்க நினைக்கும் மக்களுக்கு, தற்போது உள்ள முறையே சிறந்தது. சாதிக்கத் துடிக்கும் ஆண்களுக்கும் பெண்களுக்குமே மேலே சொன்ன மாற்றங்கள் அவசியமாகின்றன..!!!